Friday, March 2, 2012

வலையுலகில் நான் புதியவன்

என்னை பற்றி
கனவுகளிற்காய் கடந்த காலங்களை விற்பனையாக்கிக்கொண்டிருப்பவன்..
செல்லாக்காசாகிவிட்ட மானுடத்தின் மறைவு பக்கங்களில்
நிழல் உருவங்களாய் மௌனித்து அலையும் மனிதத்தை,
மகரந்த பொடி உலரா மலர்களின் மெல்லிய இதழ் தொடுத்து
கொக்கியாக்கி இழுத்துவர எத்தனிக்கிறேன்..

மறுத்துவிடுகிறது மனிதம் - ஆனாலும்
சலித்துவிடவில்லை நான்
காரிருளின் அரவணைப்பால் கருவுற்ற பூலோகம்
காலை இளவெயிலை பிரசவிக்கும் தருணத்தில் - அன்று
நள்ளிரவின் நிசப்தத்தில் ஜனனமாகி
தாயின் கதகதப்பில் ஒளிந்திருந்து,
அதிகாலை இளவெயிலின் ஸ்பரிசத்தில் தன்னை புதுப்பித்துகொள்ளும்
ஓர் அணில் குஞ்சை தூதாக அனுப்புகிறேன்

பதிலேதும் இல்லை
முதலிரவின் முன் பொழுதில்
காதலியின் அருகாமையில் , சொர்க்கத்தின் விலாசத்தை
தேடிக்கொண்டிருக்கும் காதலனை 
விலாசத்துடன் அனுப்பிவைக்கிறேன்...

மறுபடி மறுபடி தோற்றுப்போகிறேன்
ஆனாலும் சலித்துப் போய்விடவில்லை நான் 
ஏனென்றால் - ஒவ்வொரு முயற்சியின் போதும்தான்
அதிகாலை வேளையிலேயே பூக்களின் தூக்கம் கலைக்காமல்
மகரந்த பொடிகளால் நுழைந்து அதன் சுகந்தம்
அனுபவிக்க முடிந்தது,
ஒரு அணில் குஞ்சின் முதன் முதம் பூமி அனுபவத்தை
அதன் இதய அறைகளுக்குள் புகுந்து - உணர்வுகள் சிறிது
கடன் வாங்கி  நானும் புசிக்க முடிந்தது...

இருந்த போதும் மனிதத்திடம் நான் தோற்றுவிட்டேனே!!
வாருங்கள் என்னுடன்... தொலைந்த மனிதத்தை இயற்கையின்
படையெடுப்பில் சிறைமீட்டு வருவோம்